7 March 2007

10 : குறைந்த விலையில் அகலப்பட்டை இணைப்பு

இந்தத் தகவல் இலங்கை அன்பர்களுக்காக. இந்திய அன்பர்கள் தவறி வந்திருந்தால் சும்மா வந்ததற்காகத் தகவலை வாசித்துவிட்டாவது செல்லுங்களேன்.

தற்போது அகலப்பட்டை இணைப்பு 1000 ரூபா என்ற குறைந்தவிலையில் இருந்து வழங்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா டெலிக்கொம் இந்த சேவையை அளிக்கின்றது. முன்பு ஆகக்குறைந்த விலை 2500 ரூபாவாக இருந்தது. 2500 ரூபாவுடன் வாட் வரி சேர்ப்பதன் மூலம் சுமார் 2800 ரூபா வரை மாதா மாதம் செலுத்த வேண்டி இருந்தது. இது சாதாரண நடுத்தரக் குடும்பத்தாருக்குச் கொஞ்சம் அதிகமான பணமே! 2500 ரூபா பணத்திற்கு 512 Kbps வேகமுள்ள இணைப்பை வழங்கினர்.

ஆயினும் தற்போது வழங்கப்படுகின்ற 1000 ரூபா பெறுமதியான இணைப்பு மூலம் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களும் அகலப்பட்டை இணைப்பைப் பெறுவது சாத்தியமாகி உள்ளது. அத்துடன் வேகமும் 512 Kbps ஆகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி நீங்கள் நினைத்தால் அது முட்டாள் தனம். ஏனெனில் இந்த 1000 ரூபா 1 GB வரை பதிவிறக்க, பதிவேற்ற மட்டும்தானாம். அதற்கு மேல் பதிவிறக்கும் ஒவ்வொரு 250 MB க்கும் 250 ரூபாய் கட்ட வேண்டுமாம். எப்படிப்பார்த்தாலும் 2500 ரூபா பெறுமதியான இணைப்பே லாபமானது. ஆயினும் ஒரு தனிநபர் பதிவிறக்கம், பதிவேற்றங்களில் (குறிப்பாக வீடியோ கோப்புகள், திரைப்படங்கள்) அவ்வளவு ஈடுபடாதவர் என்றால் இந்த இணைப்பு பயன்தரலாம்.

இதில் உள்ள மற்றொரு பிரைச்சனை என்னவென்றால் இன்னமும் இலங்கையின் தமிழ் பிரதேசங்களான வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு இந்த அகலப்பட்டை சேவை வழங்கப்பட வில்லை. தனியே கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளிலே வழங்கப்பட்டுள்ளது. விரிவாக்கல் செலவு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து. ஒளியிழைகளைக்கான அதிகமான செலவே இதற்கு முக்கியமான காரணமாக இருக்க வேண்டும். கொழும்பின் புற நகர்ப்பகுதிகளுக்கே அண்மையில்தான் விரிவாக்கினார்கள்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் !!! கணனியே இல்லாமல் எத்தனையோ குடும்பங்கள் இருக்கும் போது இந்த விலை குறைப்பினால் என்ன லாபம் என்று கேட்பது என் காதல் கேட்கின்றது!!!

6 March 2007

9 : பிபிசி பொட்காஸ்டிங்


இது சற்றே பழைய செய்திதான் என்றாலும் விஷயம் தெரியாமல் இன்னும் பலபேர் உள்ளதால் இக்கட்டுரையை எழுதுகின்றறேன்.

முதலில் பொட்காஸ்டிங் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். அதாவது அப்பிள் ஐ பொட்டினால் பிரபலமான முறை. அதனால்தான் பொட்காஸ்டிங் என்று அழைக்கப்படுகின்றது. உங்களுக்கு விருப்பமான பொட்காஸ்டிங் செய்பவரை அதற்குரிய மென்பொருள் மூலம் இணைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு தடவையும் புதிய ஒலிக் கோப்புகள் பொட்காஸ்டிங் செய்பவரால் இடப்படும் போது அவை தானே உங்கள் கணனிக்கு மென்பொருளால் இறக்கப்படும். பின்பு நீங்கள் அதை உங்கள் ஐ பொட்டில் ஏற்றிக்கேட்கலாம். தற்போது எம்.பி3 வடிவிலேயே பொட்காஸ்டிங் கோப்புகள் வருவதால் அதைப் பதிவிறக்கி சாதாரண எம்பி3 பிளேயரிலும் கேட்கலாம். அல்லது கணனியிலேயே இயக்கிக் கேட்கலாம்.

சில காலங்களுக்கு முன்பு பிபிசியும் இந்த சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. அதாவது நீங்கள் பிபிசி வானொலியின் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை உங்கள் கணனிக்கு இறக்கி உங்களுக்கு வசதியான நேரத்தில் கேட்டுக்கொள்ளலாம்.

பிபிசியில் பரிந்துரைத்த மென்பொருள் மூலம் சந்தாக்காரர் ஆகி உங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளை பதிவிறக்கலாம் அல்லது தளத்திற்குச் சென்று இணைப்பைக் சொடுக்கி MP3 கோப்புகளைப் பதிவிறக்கலாம்.

இங்கு அறிவியல் தொடக்கம் பொழுது போக்கு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நீங்கள் பதிவிறக்குவதற்காகக் காத்துக்கிடக்கின்றன.

நான் வாராவாரம் மறக்காமல் பதிவிறக்குவது Digital Planet எனும் நிகழ்ச்சியே. இதில் கணனி சம்பந்தமான பல்வேறு புதிய தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தெரிவு செய்யுங்களேன்..!

இன்னும் என்ன தாமதம்... இங்கே சுட்டி களத்தில் இறங்கி பதிவிறக்குங்கள்.