7 March 2007

10 : குறைந்த விலையில் அகலப்பட்டை இணைப்பு

இந்தத் தகவல் இலங்கை அன்பர்களுக்காக. இந்திய அன்பர்கள் தவறி வந்திருந்தால் சும்மா வந்ததற்காகத் தகவலை வாசித்துவிட்டாவது செல்லுங்களேன்.

தற்போது அகலப்பட்டை இணைப்பு 1000 ரூபா என்ற குறைந்தவிலையில் இருந்து வழங்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா டெலிக்கொம் இந்த சேவையை அளிக்கின்றது. முன்பு ஆகக்குறைந்த விலை 2500 ரூபாவாக இருந்தது. 2500 ரூபாவுடன் வாட் வரி சேர்ப்பதன் மூலம் சுமார் 2800 ரூபா வரை மாதா மாதம் செலுத்த வேண்டி இருந்தது. இது சாதாரண நடுத்தரக் குடும்பத்தாருக்குச் கொஞ்சம் அதிகமான பணமே! 2500 ரூபா பணத்திற்கு 512 Kbps வேகமுள்ள இணைப்பை வழங்கினர்.

ஆயினும் தற்போது வழங்கப்படுகின்ற 1000 ரூபா பெறுமதியான இணைப்பு மூலம் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களும் அகலப்பட்டை இணைப்பைப் பெறுவது சாத்தியமாகி உள்ளது. அத்துடன் வேகமும் 512 Kbps ஆகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி நீங்கள் நினைத்தால் அது முட்டாள் தனம். ஏனெனில் இந்த 1000 ரூபா 1 GB வரை பதிவிறக்க, பதிவேற்ற மட்டும்தானாம். அதற்கு மேல் பதிவிறக்கும் ஒவ்வொரு 250 MB க்கும் 250 ரூபாய் கட்ட வேண்டுமாம். எப்படிப்பார்த்தாலும் 2500 ரூபா பெறுமதியான இணைப்பே லாபமானது. ஆயினும் ஒரு தனிநபர் பதிவிறக்கம், பதிவேற்றங்களில் (குறிப்பாக வீடியோ கோப்புகள், திரைப்படங்கள்) அவ்வளவு ஈடுபடாதவர் என்றால் இந்த இணைப்பு பயன்தரலாம்.

இதில் உள்ள மற்றொரு பிரைச்சனை என்னவென்றால் இன்னமும் இலங்கையின் தமிழ் பிரதேசங்களான வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு இந்த அகலப்பட்டை சேவை வழங்கப்பட வில்லை. தனியே கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளிலே வழங்கப்பட்டுள்ளது. விரிவாக்கல் செலவு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து. ஒளியிழைகளைக்கான அதிகமான செலவே இதற்கு முக்கியமான காரணமாக இருக்க வேண்டும். கொழும்பின் புற நகர்ப்பகுதிகளுக்கே அண்மையில்தான் விரிவாக்கினார்கள்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் !!! கணனியே இல்லாமல் எத்தனையோ குடும்பங்கள் இருக்கும் போது இந்த விலை குறைப்பினால் என்ன லாபம் என்று கேட்பது என் காதல் கேட்கின்றது!!!

6 March 2007

9 : பிபிசி பொட்காஸ்டிங்


இது சற்றே பழைய செய்திதான் என்றாலும் விஷயம் தெரியாமல் இன்னும் பலபேர் உள்ளதால் இக்கட்டுரையை எழுதுகின்றறேன்.

முதலில் பொட்காஸ்டிங் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். அதாவது அப்பிள் ஐ பொட்டினால் பிரபலமான முறை. அதனால்தான் பொட்காஸ்டிங் என்று அழைக்கப்படுகின்றது. உங்களுக்கு விருப்பமான பொட்காஸ்டிங் செய்பவரை அதற்குரிய மென்பொருள் மூலம் இணைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு தடவையும் புதிய ஒலிக் கோப்புகள் பொட்காஸ்டிங் செய்பவரால் இடப்படும் போது அவை தானே உங்கள் கணனிக்கு மென்பொருளால் இறக்கப்படும். பின்பு நீங்கள் அதை உங்கள் ஐ பொட்டில் ஏற்றிக்கேட்கலாம். தற்போது எம்.பி3 வடிவிலேயே பொட்காஸ்டிங் கோப்புகள் வருவதால் அதைப் பதிவிறக்கி சாதாரண எம்பி3 பிளேயரிலும் கேட்கலாம். அல்லது கணனியிலேயே இயக்கிக் கேட்கலாம்.

சில காலங்களுக்கு முன்பு பிபிசியும் இந்த சேவையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. அதாவது நீங்கள் பிபிசி வானொலியின் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை உங்கள் கணனிக்கு இறக்கி உங்களுக்கு வசதியான நேரத்தில் கேட்டுக்கொள்ளலாம்.

பிபிசியில் பரிந்துரைத்த மென்பொருள் மூலம் சந்தாக்காரர் ஆகி உங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளை பதிவிறக்கலாம் அல்லது தளத்திற்குச் சென்று இணைப்பைக் சொடுக்கி MP3 கோப்புகளைப் பதிவிறக்கலாம்.

இங்கு அறிவியல் தொடக்கம் பொழுது போக்கு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நீங்கள் பதிவிறக்குவதற்காகக் காத்துக்கிடக்கின்றன.

நான் வாராவாரம் மறக்காமல் பதிவிறக்குவது Digital Planet எனும் நிகழ்ச்சியே. இதில் கணனி சம்பந்தமான பல்வேறு புதிய தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தெரிவு செய்யுங்களேன்..!

இன்னும் என்ன தாமதம்... இங்கே சுட்டி களத்தில் இறங்கி பதிவிறக்குங்கள்.

23 February 2007

8 : Google Apps ஆபீஸ் மென்பெருளுக்கு ஈடாகுமா??


சுமார் 50 அமெரிக்க டொலருக்கு கூகள் அப்ஸ் என்டபிரைஸ் பதிப்பு கிடைக்கின்றது. இது ஜிமெயில் உடன் integrate ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பயனர்கள் 10 GB மின்னஞ்சல் இடத்தை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். கூகள் டொக்ஸ், ஷீட்ஸ் என்பவற்றுடனும் சேர்ந்து இயங்கக் கூடியதாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

கூகள் இதைப் பெரிதும் நம்பி இருப்பதற்கான காரணம் இதன் குறைந்த விலையான 50 டாலர் என்பதனாலாகும்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட கூகளின் இலவச பீட்டா பதிப்பை பல வணிக நிறுவனங்களும் பல பல்கலைக்கழகங்களும் பாவிப்பதாக கூகள் தெரிவிக்கின்றது. விக்கி போன்று நிறுவனத்தில யார் யார் என்ன என்ன மாற்றங்கள் செய்தார்கள் என்பதை பார்க்கக் கூடியதாய் இருக்கும்.

இதன் மூலம் மைக்ரோசாப்டிற்கு நெருக்குதல் ஏற்பட்டாலும் அதை நோக்கமாகக் கொண்டு தாங்கள் செயற்படவில்லை என்று கூகள் அறிவித்துள்ளது.
உத்தியோக பூர்வப் பக்கம்

மேலும் அறிய

22 February 2007

7 : விடைபெறும் வின்டோஸ் 98


உலகம் முழுவதிலும் இப்போதும் 70 பயனர்கள் வின்டோஸ் 98 ஐ பாவித்துக் கொண்டு இருக்கின்ற வேளையில் மைக்ரோசாப்ட் 11 ஜூலை முதல் தனது வின்டோஸ் 98 வாடிக்கையாளருக்கான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அத்துடன் பாதுகாப்பு ஓட்டைகளை தடுப்பதற்கான தர முயர்த்திகளையும் வின்டோஸ் 98 றிற்காகத் தயாரிக்கப் பேவதில்லை என்று அறிவித்துள்ளது.

உண்மையில் இதே செயற்பாட்டை 2003 ல் மைக்ரோசாப்ட் எடுக்க முனைந்தாலும் வாடிக்கையாளர்களின் கடும் எதிர்ப்புக் காரணமாகத் தள்ளிப் போட்டது.

மைக்ரோசாப்ட் கருத்துத் தெரிவிக்கையில் தாம் சேவையை நிறுத்தக் காரணம் அந்த இயங்கு தளம் பழைய இயங்குதளம் என்பதோடு வின்டோஸ் 98 பயனர்களை பாதுகாப்பற்ற நிலைக்கு அழைத்துச் செல்லக் கூடியதுமாகும் என்று தெரிவித்தனர்.

அத்துடன் மைக்ரோசாப்ட் அனைவரையும் வின்டோஸ் எக்ஸ்.பி போன்ற இயங்குதளத்திற்கு மாறுமாறு பரிந்துரைத்துள்ளது. அதாவது புது இயங்கு தளத்தை வாங்குங்கள். எக்ஸ்.பீ க்கு மாறினாலும் அதற்கேற்றவாறு வன் பொருள் மற்றும் கருவிகளைத் தரம் உயர்த்த வேண்டி இருக்கும்.

திருட்டு மென்பொருள் பயன் படுத்துபவர்களுக்கு எந்தப் பிரைச்சனையும் இல்லை. வழமைபோல பயனர் உதவி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன என்று சொல்லிக் கொண்டு இருக்கலாம் :)

மேலதிக தகவலுக்கு...


அன்பின்,
மயூரேசன்.

21 February 2007

6 : கணனியில் Screen Shot எடுத்தல்

அண்மையில் சுப்பையா அவர்கள் ஸ்கரீன் ஷொட் (Screen Shot) எடுப்பது பற்றி ஒரு கட்டுரை எழுதுமாறு கேட்டிருந்தார். வின்டோசில் ஸ்க்ரீன் ஷொட் எடுப்பது சின்ன வேலையே!

முதலில் உங்களுக்கு ஸ்க்ரீன் ஷொட் எடுக்க வேண்டிய செயலியை திறந்து கொள்ளுங்கள் பின்னர் தட்டச்சுப் பலகையில் வலது பக்கம் பாருங்கள் Print Screen என்றொரு கீ இருக்கும் அதை இப்போது தட்டுங்கள்.

Print Screen கீயைத் தட்டியதும் உங்கள் கணனியின் திரையில் தெரியும் விடையங்கள் இப்போது கிளிப் போட்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.

உதாரணத்திற்கு இப்போது மைக்ரொசாப்ட் வேர்ட் சென்று Edit -> Paste என்று சொடுக்குங்கள் உடனடியாக உங்கள் கணனித் திரையில் தெரிந்த காட்சிகள் உங்கள் வேர்ட் டொகுமென்டில் வரும். கீழே உள்ள படத்தை பார்க்க.



அடுத்து ஸ்க்ரீன் ஷொட்டை எவ்வாறு படமாகச் சேமிப்பது என்று பார்ப்போம். அதாவது முதலில் சொன்னவாறு Print Screen விசையை அமத்திய பின்னர் பெயின்ட் போன்ற மென்பொருள்குச் சென்று Edit -> Paste என்று சொடுக்குங்கள். இப்போது திரையின் படம் உங்கள் பெயின்டில் ஒரு படமாக அமர்ந்து இருக்கும். பின்னர் வழமைபோல சேமித்துக்கொள்ளலாம். கீழே இருக்கும் படம் அவ்வாறு சேமிக்கப்பட்டதே!


உங்களுக்கு ஏதாவது ஒரு பகுதியை வெட்டியெடுக்க வேண்டும் என்றால் பெயின்டில் அதற்காக உள்ள வசதி மூலம் வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.

சந்தேகம் வந்தால் கேளுங்கள்.

அன்புடன்,
மயூரேசன்.

20 February 2007

5 : விஸ்டாவால் சூழல் பிரைச்சனைகள்


சூழலியல் நிபுனர்கள் விஸ்டாவினால் பெருமளவு சூழல் பிரைச்சனைகள் ஏற்படப் போவதாகக் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் விஸ்டாவினால் பல கணனிகள் பயனற்றுப் போய் கழக்கப்பட வேண்டி உள்ளமையாகும்.

விஸ்டாவில் பயன்படும் Encryption முறை பழைய கணனிகளில் பயன்படப் போவதில்லையாம் அத்துடன் விஸ்டாவில் பயன்படும் உயர் திறனுடன் கூடிய வரைகலை இடைமுகப்பு காரணமாகப் பழைய கணனிகளில் விஸ்டாவைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வணிகத் துறையில் பயன்படும் கணனிகளில் சுமார் அரைவாசிப் பங்கு கணனிகள் இந்த விஸ்டா மாற்றத்தினால் கழிக்க வேண்டி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் சுமார் 10 மில்லியன் கணனிகள் கழிக்கப்பட வேண்டி உள்ளது.

பசுமைப் புரட்சி இயக்கத்தினர் (Green Peace) இந்த முயற்சியின் மூலம் மின்-கழிவுகள் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதேவேளை மைக்ராசாப்ட் தான் எதிர்பார்த்தபடி விஸ்டா மற்றும் ஆபீஸ் 2007 க்கு வணிகத் துறையில் இருந்து பெருமளவு வரவேற்புக் கிடைத்துள்ளதாகச் சொல்லியுள்ளது.

அண்மையில் அப்பிள் கணனிகளுக்கான ஆபீஸ் 2007 பதிப்பு ஆபீஸ் 2008 என்ற பெயருடன் வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது சண்சொலாரிஸ, மற்றும் இன்டெல் ஆக்கிடெக்சரில் இயங்கக் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

17 February 2007

4 : தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில்



தற்போது தமிழ் சொற்பிழை திருத்தியுடன் ஜிமெயில் வந்துள்ளது.ஆரம்ப நிலை என்பதால் என்னவோ கடுமையாக சொற்களைப் போட்டுக் குளப்பிக் கொள்கின்றது. அன்புள்ள என்ன வார்த்தையையே பிழை என்று காட்டுகின்றது என்றால் பாருங்களேன்.

இது வெறும் ஆரம்பம் தானே. பார்ப்போம் எந்தளவிற்கு நம்ம கூகள் ஆண்டவர் தமிழுக்கு இடம் வழங்குகின்றார். ஏற்கனவே ஜிமெயில் தமிழாக்கம் நடைபெற்று வந்தாலும் அதில தர நிர்ணயம் இல்லாமல் ஒவ்வொருத்தரும் தம்பாட்டுக்கு தமிழாக்கம் செய்வதாக அறிகின்றேன். இந்நிலை விரைவில் நீங்க வேண்டும்.

ஜிமெயிலுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே ஹிந்தி இடைமுகம் வழங்கப்பட்ட போதும் இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாமை வருத்தத்திற்குரிய விடையமே!

அன்புடன்,
மயூரேசன்.

16 February 2007

3 : TUNE தமிழ் கணனியியலிற்கு வரமாகுமா??? சாபமாகுமா???

தமிழ் கணனியியலில் புதிய யுனிக்கோட் முறை ஒன்று தற்போது பரீட்சாத்தமாகப் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே TUNE (Tamil Unicode New Encoding) அல்லது TANE (TAmil New Encoding) என்று அறியப்படுகின்றது.அண்மையின் தமிழ் கணனியியல் ஆர்வலர் மாலன் மூலம் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஏன் அது ஆரம்பிக்கப்பட்டது இதனால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம். இங்கே இது பற்றிய ஒரு சிறு குறிப்பைத்தருகின்றேன்.

யுனிக்கோடு (Unicode) முறைமை யுனிக்கோடு கான்சட்டேரியம் (Unicode Consortium) எனும் நிலையத்தால் அமைக்கப்பட்டது. இந்த முறையில் உலகின் பிரதான மொழிகள் யாவும் அடக்கப்பட்டுள்ளன. தமிழ் இந்தி தொடக்கம் ஆங்கிலம் வரை முக்கிய மொழிகள் இதில் பயன்படுகின்றன. ஏன் இந்த வலைப்பதிவு கூட யுனிக்கோடு முறமையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கான்சட்டேரியத்தில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசு அத்துடன் உத்தமம் ஆகிய நிறுவனங்களும் பங்கு வகிக்கின்றன.

IISCI முறைமையில் இருந்து யுனிக்கோடு முறைக்கு மாறும் போது மற்றய மொழிகளைப்போல இஸ்க்கி அமைப்பையே யுனிக்கோட் என்கோடிங்கில் தமிழ் பயன்படுத்தியது. இதன் காரணமாக Complex Script ஆக வரத்தேவையில்லாத தமிழ் மற்றய இந்திய மொழிகளைப்போல Complex Script ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Complex Script பொதுவாக லெவல் இரண்டு மொழிகள் ஆகும். எ-கா ஹிந்தி, சீனம், ஜப்பானீஸ். தமிழும் லெவல் இரண்டு மொழிகளுள் இதனால் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஜேர்மன், பிரஞ்சு போன்ற மொழிகள் லெவல் ஒன்று மொழிகள் ஆகும்.

லெவல் ஒன்று மொழியாக இருப்பதனால் பல நன்மைகள் உள்ளன. அதாவது செயலி தயாரிப்பவரோ இயங்குதளமோ இதற்கான Core Level ஆதரவை வழங்க தேவையில்லை. இதன்காரணமாக சில குறைந்தளவு மென்பொருள்களிலேயே நாம் தமிழ் யுனிக்கோடைப் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது (MS Office, Open Office..etc). இது வருந்தத்தக்க விடயமாகும். Level one மொழியாக தமிழ் இருக்குமானால் ஆங்கிலம் பயன்படும் அனைத்து செயலியிலும் தமிழையும் பயன்படுத்த முடியும். இதன்காரணமாக தமிழ் கணனியியல் மிக வேகமாகப் பரவும் என்பதை மறுக்க முடியாது. மக் மற்றும் சில லினக்ஸ் (சில லினக்ஸ் இயங்கு தளங்கள் ஆதரவு வழங்குகின்றன) இயங்கு தளங்களில் (Operating System) இன்றும் தமிழ் யுனிக்கோடு ஆதரவு இல்லாமையைக் குறிப்பிட வேண்டும்.

போ என்ற எழுத்து உண்மையில் ஒரு தமிழ் எழுத்தாக இருந்தாலும் இது யுனிக்கோடு முறையில் 3 எழுத்துகளாக கணக்கெடுக்கப்படும்
1. இரட்டைக்கொம்பு
2. ப னா
3. அரவு
ஆகவே ஆங்கிலத்தில் 3 எழுத்து சேமிக்கப்படும் இடத்தில் தமிழில் ஒரு எழுத்து சேமிக்கப்படுகின்றது. இதனால் தமிழில் கோப்புக்கள் சேமிக்கத்தேவையான சேமிப்பகம் அதிகமாகும்.

இவ் விடயத்தை தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணித் தமிழ் சங்கம், INFITT ஆகியன இணைந்து புதிய என்கோடிங் முறமையைத் தீர்மாணித்தனர். இதைப் பல்வேறு இடங்களில் பரீட்சித்தும் பார்த்து இது வினைத்திறனானது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பின்பு இத்தகவல் தமிழக அரசூடாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது. அமைச்சு இத்தகவலை யுனிக்கோட் கொன்சட்டேரியத்திற்கு அறிவித்தது. ஆயினும் யுனிக்கோட் கான்சட்டோரியம் வினைத்திறனை கணக்கில் எடுப்பதில்லை அவர்கள் இதன் உறுதித் தன்மையை நன்கு ஆராயுமாறு கூறிவிட்டதுடன் ஒரு மாற்று வழியையும் பரிந்துரைத்தனர்.

மாற்று வழியானது யுனிக்கோடில் தனிப்பட்ட பயனர் பிரதேசத்தில இட்டு பரீட்சித்துப் பார்ப்பதே (However the Unicode consortium suggested an alternate measure to put the proposed All Character scheme in Private Use Area (PUA) of the Unicode space to startwith). அவ்வாறே தற்போது 16 பிட் முறைமையில் தமிழ் புதிய என்கோடிங் அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரீட்சாத்த முயற்சியில் உள்ளது.

இதை பயன்படுத்திப் பார்க்க தமிழ் கணனி ஆர்வலர்கள், தமிழ் கணனி செயலி வடிவமைப்பாளர்கள் போன்றவர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக இதில் உள்ள பிழைகள் தீர்க்கப்பட்டு புதிய யுனிக்கோடு முறமை தமிழிற்கு உருவாகும். இதன் மூலம் நாமும் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளைப்போல தமிழையும் பயன்படுத்தலாம். தமிழ் மொழியின் பயன்பாடு தமிழில் தற்போது இருப்பதை விட மேலும் இலகுவாகும். மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கும் புதிய கதவுகள் திறந்து விடப்படும் ஆகவே நீங்கள் இந்த விடயத்தை மற்றவர்களுக்குப் பரப்புவதுடன் உங்களால் ஆன உதவியையும் வழங்குங்கள்.

இதற்கு தற்போது எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. பல நிரலாளர்கள் இது குட்டையைக் குளப்பும் முயற்சி என்றும் மற்றய இந்திய மொழிகளில் இருந்து தமிழை இது தனியாக்கிவிடும் என்பதே அவர்கள் கருத்து. அதைவிட புதிய TUNE/TANE முறமைக்கு தமிழக அரசு தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற அரசுகளின் ஆதரவு பெறப்படவில்லை என்பது இவர்களின் வாதம்.

எது என்னவானாலும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்துத்தான் பார்ப்போமே!

மூலங்களைத் தரவிறக்க...

2 : JavaScript - Java வேறுபாடு என்ன?

சில காலங்களுக்கு முன்பு நெட்ஸ்கேப் நவிகேட்டர் நிறுவனத்தில் தனியே எச்.டி.எம்.எல் மாத்திரம் பயன்படுத்தி வினைத்திறனான, பயனருடன் தொடர்பாடக்கூடிய இணையப் பக்கங்களை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டனர். இதை நீக்க 1995 ல் லைவ் ஸ்கிரிப்ட் (Live Script) என்ற மொழியை உருவாக்கினர். இதன் மூலம் இணையத்தள வடிவமைப்பாளர்கள் இணையப் பக்கத்தில் தமது ஆதி்க்கத்தை நிலைநிறுத்தத் தொடங்கினர்.

இதேவேளையில், சண் மைக்ரோ சிஸ்டம் (Sun Micro systems) ஜாவா (Java) என்ற மொழியை அறிமுகப்படுத்தியது. ஜாவா விரைவில் பிரபலமாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாக நெட்ஸ்கேப் நிறுவனமும் தமது நெட்கேப் 2.0 பதிப்பில் ஜாவாவிற்கான ஆதரவை ஏற்படுத்தியது. அத்துடன் தமது லைவ் ஸ்கிரிப்ட் என்ற மொழியை ஜாவா ஸ்கிரிப்ட் (Java Script) என்று மாற்றிக்கொண்டனர். இதன் மூலமாக ஜாவா ஸ்கிரிப்ட் மொழி பலரது கவனத்தில் பட்டது என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இதைத்தவிர ஜாவாவிற்கும் ஜாவா ஸ்கிரிப்ட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டிற்கும் தற்போதய நவீன உலாவிகளில் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றைப் பார்த்த மைக்ராசாப்ட் அண்ணா சும்மா இருப்பாரா அவர் பங்கிற்கு ஜெஸ்கிரிப்ட் (JScript) என்ற மொழியை உருவாக்கினார். இந்த ஜெஸ்கிரிப்ட் ஜாவா ஸ்கிரிப்ட்டின் மறு வடிவமாகவே இருந்தது பின்னர், இதன் 2.0 பதிப்பும் வெளிவந்தது, இது பொதுவாக சேர்வர் சைட் சார்ந்து இயங்குவதாகவே உள்ளது (turning JScript into a server-side scripting language that, when embedded inside ASP pages, could access server-side databases and create HTML pages with dynamic content). இதே வேளை ஜெஸ்கிரிப்ட் போலவே வி.பி.ஸ்கிரிப்ட் என்ற மொழியையும் மைக்ரோஃசாப்ட் வெளியிட்டம இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே விபி ஸ்கிரிப்ட் வேலை செய்யும் என்பதால் ஜெ ஸ்கிரிப்ட், ஜாவா ஸ்கிரிப்ட் அளவு பிரபல்யம் அடையவில்லை.

ஜெஸ்கிரிப்டின் பதிப்புகள் பல தற்போது வெளிவந்துவிட்டன. விசுவல் ஸ்டூடியோவில் (Visual Studio) ஒரு பகுதியாக தற்போது ஜெஸ்கிரிப்ட் வெளியிடப்பட்டு பிரபலம் பெற்றுள்ளது.

இந்த இரு ஸ்கிரிப்ட் மொழிகளால் மைக்ரோசாப்டும் நெட்ஸ்கேப் நவிகேட்டரும் தமக்கிடையில் போட்டி போட்டு தரநிர்ணயத்தில் கோட்டை விட்டனர். ஆயினும் தற்போது European Computer Manufacturing Association (ECMA) சில நடவடிக்கை மூலம் தரநிர்ணயத்தை ஏற்படுத்தியுள்ளனர். இப்படியே போனால் ஜாவா ஸ்கிரிப்டும் ஜே-ஸ்கிரிப்டும் என்று ஒரு கட்டுரை எழுதலாம் போல உள்ளது.

விடயம் அறிந்த மென்பொருள் வல்லுனர்களே, இணைய வடிவமைப்பாளர்களே ஏனைய விபரங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இத்தனையும் ஆர்வக்கோளாரில் நான் வாசித்து அறிந்துகொண்டவையே!

Download a Free E-book

அன்புடன்,
ஜெ.மயூரேசன்.

1 : கணனி உலகிற்கு வருக

ஏற்கனவே ஒரு வலைப்பதிவு இருக்கும் போது எதற்குப் புதிதாக இந்த வலைப்பதிவு என்ற கேள்வி எழுவது நியாயமே. அதற்கான பதில்களைத் தருவதுடன் இந்த வலைப்பதிவின் வாசம் தொடங்குகின்றது.

என்னிடம் ஏற்கனவே இருக்கும் வலைப்பதிவில் நான் பலதரப்பட்ட கட்டுரைகளை எழுதுகின்றேன். சிறுகதை நகைச்சுவைகள் என்று அந்தப்பட்டியல் நீள்கின்றது. அந்த கலகலப்பினுள்ளே கணனிக் கட்டுரைகள் அடிபட்டுப் போய்விடுவதாகவே நான் உணருகின்றேன். ஆகவே கணனிக் கட்டுரைகளுக்கென்று இந்த புதிய வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன். இந்த நீண்டநாள் கனவு இன்றே நிறைவேறுகின்றது.

எனது பிரதான வலைப்பதிவான தமிழ் வலைப்பதிவில் இருந்து கணனிசார் கட்டுரைகளை சேகரிக்கும் பதிவாகவே இது ஆரம்பத்தில் இருக்கும். காலப்போக்கில் தமிழ் வலைப்பதிவில் கணனி சார் கட்டுரைகள் இடப்படாமல் இங்கு மட்டுமே இடப்படும்.

இங்கு கணனி சார் மிக நுட்பமான பதிவுகள் அவ்வளவாக இடம்பெறாது. இங்கு கணனியியலின் அடிப்படை சம்பந்தமான கட்டுரைகளும் எனது அனுபவங்களும் கட்டுரைகளாக வடிவம் பெறக் காத்து இருக்கின்றன.

முதலில் எனது முன்னய வலைப்பதிவல் எழுதிய கணனிசார் கட்டுரைகளை இங்கு இடம் மாற்றுவதாக உள்ளேன். அதன் பின்பு புதிய கட்டுரைகள் எழுதுவதாகவும் உள்ளேன்.

என்றும் அன்புடன்
ஜெ.மயூரேசன்